வெள்ளி, டிசம்பர் 06, 2013

கேள்வி பதில்

கேள்வி: ஐயா, ' மனசாட்சி ' என்று கூறுகிறார்களே அது கருமையம் தானா?  மகரிஷியின் பதில்: ஆம். அதாவது ஒரு பொருளை வியாபாரி தெருவில் விற்றுக் கொண்டு வருகிறார். பொருளின் விலை என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். அவர் 10 ரூபாய் விலை சொல்கிறார். ஏனப்பா நீ என்ன விலைக்கு இதை வாங்கினாய் என்று கேட்கிறீர்கள். அதற்கு அவர் 'நான் 8 ரூபாய்க்கு வாங்கினேன்' என்று உங்களிடம் கூறுவார். ஆனால் உண்மையில் அவர் 5 ரூபாய்க்குத் தான் வாங்கியிருப்பார். உண்மையைச் சொன்னால் நீங்கள் 6 அல்லது 7 ரூபாய்க்குத் தான் வாங்க முடியும் என்று கூறுவீர்கள்' என எண்ணி 8 ரூபாய்க்கு வாங்கியதாக வாய் சொல்லும். ஆனால் அங்கே உள்ளே உள்ள கருமையப் பதிவு 5 ரூபாய்க்குத்தான் வாங்கினேன் என்று சொல்லுமல்லவா. அது தான் மனசாட்சி.  ஒரு திருடன் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான். நீதிபதி திருடனைப் பார்த்து "ஏனப்பா நீ இன்னின்ன பொருட்களை இந்த விலாசத்தில் உள்ள வீட்டில் திருடினாய் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளதே நீ என்ன பதில் சொல்கிறாய்?" என்று கேட்கிறார். திருடனுக்குள், தான் அந்த வீட்டில் எப்படிப் போய் எந்த நேரத்தில் என்னென்ன பொருள்களைத் திருடினானோ அத்தனையும் கருமையத்திலிருந்து காட்சியாகிக் கொண்டேயிருக்கும். ஆனால் வாய் "நான் திருடவே இல்லைங்க" என்று கூறும். நமக்குள் உள்ள அறிவே தெய்வமாக இருந்து கூறுவதைத்தான் 'மனசாட்சி' என்கிறோம். - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக