திங்கள், டிசம்பர் 05, 2011

எல்லாம் வல்ல தெய்வமது---பாடல்

எல்லாம் வல்ல தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன்
வாழ்வில் உயிரில் அறிவும் அவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்.

அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம்நீ
அவனில்தான்நீ உன்னில் அவன்
அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால்நீ சிறியோன்
அவனை அறிந்தால்நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்தஇடம்
அறிவு முழுமை அதுமுக்தி.
வேதாத்திரி மகரிஷி

குண்டலினி யோகம்

நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளியமுறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே சொல்லாமல், கீழ்நோக்கிப் போகா விட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும். அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கிறோம். அதனால் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மனிதனின் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ் நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம். சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே, இயக்க மையத்தை முறையாக உசுப்பி விடும்போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறைக் குண்டலினியோகப் பயிற்சி என்கிறோம். இந்த உயிர்ச்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவி இருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, உயிர்ச் சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி உள்ளனர். அவைகளின் அடி மட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும்.
ஒவ்வொரு மையத்திலும், உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே போகப் போக, பலன்மிகும். இவ்வாறு இயக்கிவிடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும். உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லையென்றால் உடல் நோய்கள், மன நோய்கள் போன்றவை ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும். இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும் பயிற்சியையும் நல்குவதே எளிய முறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம், அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும்.
வேதாத்திரி மகரிஷ

மனவளக் கலைக் காயகற்பப் பயிற்சி

காய கல்ப யோகம
மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும் அது. நாம் உண்ணும் உணவு.
1. ரசம்
2. ரத்தம்
3. சதை
4. கொழுப்பு 5. எலும்பு
6. மஜ்ஜை மற்றும்
7. சுக்கிலம
என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் ‘சீவ இன அனைத்தடக்கப் பொருள்’ தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.
உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.
இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்.
நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள். எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.
உதாரணமா
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!
காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. இந்தக் காயகற்ப பயிற்சி காலத்தால் பல பிரிவுகளாக்கப்பட்டுத் தூரக் கிழக்கு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன.
சித்த மருத்துவத் துறையில் எனக்கிருக்கும் ஆழ்ந்த பற்றுதலால் சித்தர்கள் அருளியுள்ள பல நூல்களையும் ஆராய்ந்ததோடு எனது அருள் தொண்டு பயணத்தின் போது நான் சந்தித்த பல கீழ்நாட்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம்திரட்டிய பல பயிற்சி முறைகளையும் ஒன்று இணைத்து ‘மனவளக் கலைக் காயகற்பப் பயிற்சி’ என்ற பெயரில் போதித்து வருகிறேன். இப்பயிற்சியை இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.
இந்த மனவளக்கலைக் காயகற்பப் பயிற்சியில் எனது இருபது ஆண்டுகால செயல்முறை அனுபவங்களும் இணைந்துள்ளன. இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது. முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.
திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.
1.
ஆயகலை கள்மொத்தம் கணக்கெடுத்தோர்
அறுபத்தி நாலுஎன்றார் அனைத்தும் கற்றும்
காயகற்ப மெனும்கலையைக் கற்கா விட்டால்
கற்றதெல்லாம் மண்புக்கும் உடல்வி ழுந்தால்
மாயமெனும் காந்தம்உயிர் வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்
தீயவினை கள்கழிய உலகுக் கென்றும்
தெளிவான அருள்ஒளியாய் நிலைக்கும் ஆன்ம
2.
கறைபோக்கி வித்ததனை உறையச் செய்யும்.
காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும்
நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு
நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும்
இறையுணர்வு விழிப்புநிலை அறிவுக் கூர்மை
இனியசொல் எண்ணத்தின் உறுதி மேன்மை
மறைபொருளாம் மனம் உயிர் மெய் யுணர்வு கிட்டும்.
மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும்!
காயகல்பம் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்துவந்தால் நோயின்றி வாழலாம். உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள துருவ அமைப்பு சீராகும். மரபு வழியாக வந்த நோய்களைக் கூட சில மாதங்களில் போக்கி நலமடையலாம்.
சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நீங்கி அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும்.
காயகற்பப் பயிற்சி பயன்கள
1. உடல் நலம் சீரடையும்; ஆஸ்த்மா, சர்க்கரைவியாதி, குடல்புண், மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக நீங்கும் / மட்டுப்படும்.
2. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.
3. முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும்.
4. பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும்.
5. மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும்.
6. தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும்.
7.மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும்.
இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இரு பாலரும் (எல்லா மதத்தினரும்) கற்று இன்புறலாம். ---- யோகிராஜ் வேதாத்திரி மஹரிஷி

அகத் தவம்

அகத்தவத்தின் பெருமை
”அகத் தவத்தின் பொருள் கண்டு
அதன் பெருமை உணர்ந்திடுவீர்!
அகத் தவமோ உயிரினிலே
அறிவை ஒடுக்கும் பயிற்சி!
அகத் தவத்தால் மேலும் உயிர்
அம்மாகி மெய்ப்பொருளாம்!
அகத் தவத்தால் வீடுணர்ந்து
அமைதி பெற்று இன்புறலாம்
”அகத் தவத்தால் ஐம்புஅனை அடக்கி
அறிவறிந் திடலாம்!
அகத் தவத்தால் அறு குண
ஆளுமைப் பேறடைந்திடலாம்!
அகத் தவத்தால் இல்லறத்தை
அன்பகமாய் ஆற்றிடலாம்!
அகத் தவத்தால் அனைத்துயிர்கள்
அருநட்பைப் பெற்றிடலாம்!
அகத் தவம் தீவினை யகற்றும்
அருள் நெறியை இயல்பாக்கும்!
அகத் தவமே இறைவழிபாடனைதிலும்
ஓர் சிறந்த முறை!
அகத் தவமே உயிர் வழிபாடதனை
விளக்கும் ஒளியாம்!
அகத் தவமே மதங்களெல்லாம்
அடைய விரும்பும் முடிவு!”

யோகிராஜ் வேதாத்திரி மஹரிஷி

வேதாத்திரியம்

வாழ்க வளமுடன். வேதாத்திரியம் என்பது மனித சமுதாயத்தின் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு சொல்லவந்த முழுமையான மானுட வேதநூல் என்றால் அது மிகையாகாது. மனதின் குழப்பங்கள் எதுவாக இருந்தாலும் தீர்வு உண்டு. கோபம், கவலை,முறையற்ற பால்கவர்ச்சி,வஞ்சம் என அனைத்தும் மாற்றி முறையாகவும் நேர்மையாகவும் தனக்கும் சமுதாயத்துக்கும் தற்காலத்திலோ பிற்காலத்திலோ துன்பம் வராத வகையில் உருவாக்கப்பட்ட அறநெறி வாழ்க்கை ஆகும்.